மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளனர். இதில் 543 உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆவர். மீதமுள்ள இரு உறுப்பினர்கள் மத்தியில் அமையும் அரசு பரிந்துரையின் பெயரில் இந்திய குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிப்பார். தற்போது பாஜக கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களில் ஒரு சிலருக்கு மக்களவையில் மீண்டும் வாய்ப்பளிக்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு மக்களவை தேர்தலில் வாய்ப்பளிக்காததால் மக்களவையில் நியமன உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என அரசியல் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதே போல் தமிழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த பொன். ராதாகிருஷ்ணனுக்கு மக்களவையில் வாய்ப்பு வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.