இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது. நிலவின் தென் பகுதியில் இறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை நிலவின் தென் துருவத்தில் தொடங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் நிலாவில் லேண்டர் தரையிறங்கிய போது, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அடுத்து கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியதும், டெல்லியிலிருந்து நேராக நேற்று பெங்களூருவில் வந்திறங்கினார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சந்திரயான் - 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளைச் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான் - 3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம் சிவசக்தி என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியையும் குறிக்கும். அதேபோன்று 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தைப் பதித்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயர் சூட்டப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கமளித்துள்ளார். அதில், “அறிவியலும், நம்பிக்கையும் இருவேறு பொருள்கள் கொண்டவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. பல்வேறு நாடுகள் நிலவில் தாங்கள் தரையிறங்கிய இடங்களுக்கு பெயர்கள் வைத்துள்ளன. பெயர் சூட்டிக்கொள்வதற்கு அந்தந்த நாடுகளுக்கு உரிமை உண்டு. அதே சமயம் சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயரிடுவதில் எந்த சர்ச்சையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.