மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக "சங்கல்ப் பத்ரா" எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்சங்கள்:
சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன்.
தீவிரவாதம் வேரோடு அழிக்கப்படும் வரை தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஜி.எஸ்.டி எளிமையான வடிவமைப்புக்கு மாற்றப்படும்.
பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த திட்டம்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்.
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 100 லட்சம் கோடி.
காவல்துறை நவீனப்படுத்தப்படும்.
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு.
ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின்கள்.
நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
கருப்பு பணத்திற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
சபரிமலையின் பாரம்பரியம் குறித்து உச்சநீதிமன்றத்திடம் எடுத்து கூறப்படும்.
நாடு முழுவதும் 50 நகரங்களில் மெட்ரோ ரயில்.
2022 க்குள் அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள வசதி.
2024-க்குள் நாட்டில் மேலும் 200 கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் உருவாக்கப்படும்.
நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2022-க்குள் இரட்டிப்பாக்கப்படும்.
யோகாவை உலக அளவில் கொண்டுசெல்ல மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.