ஐந்து மாநில சட்டசபை தேர்தல் இந்தியாவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், இந்தியாவில் யார் ’டிவி சேனல்’களுக்கு அதிக விளம்பரம் கொடுத்துள்ளது என்று பார்க்(BARC)பட்டியல் ஒன்றை வெளியிட்டது.
அந்த பட்டியலில், தற்போது மத்தியை ஆட்சி செய்துகொண்டு இருக்கும் பாஜகதான் ஒரு கமர்ஷியல் நிறுவனங்களை விட அதிகமாக டிவி சேனல்களில் விளம்பரம் செய்து வருவது தெரியவந்துள்ளது. பாஜக, ஐந்து மாநில தேர்தலுக்காக டிவி சேனல்களுக்கு அதிக விளம்பரம் கொடுத்து முதல் இடத்தில் உள்ளது. 22,099 புள்ளிகளில் பாஜக அதிக விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பார்க் கூறுகையில், ”இந்தியாவில் கடைகோடி வரை அனைவரது வீட்டிலும் டிவி இருப்பதால் அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி விளம்பரங்களை கையில் எடுக்க தொடங்கியுள்ளன” என்றார். தொலைக்காட்சி விளம்பரங்கள் குறித்த கேள்விக்கு பாஜகவின் தலைமை ஊடக பிரிவு தலைவர் அனில் பலூனி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
இந்த பட்டியலில் கமர்ஷியல் நிறுவனங்களை தவிர பாஜக கட்சி மட்டும்தான் இடம் பிடித்துள்ளது, இந்தியாவிலுள்ள வேறு எந்த கட்சியும், குறிப்பாக காங்கிரஸ் போன்ற எதிர் கட்சிகள் இந்த பட்டியலில் இடம் பிடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஒரு பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில்,நான்கரை வருடங்களாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் விளம்பரங்களுக்கு என்று ரூ. 5000 கோடி வரை செலவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல 2018 ஆம் ஆண்டில் பாஜக தேர்தலுக்காக ரூ. 2,221.1 கோடி செலவு செய்துள்ளதாகவும் மற்றொரு தகவலில் தெரிவிக்கப்படுகிறது.