
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது வழக்கம். இந்த வருடம் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் பலர் சன்னிதானம் செல்லாமலேயே பாதி வழியில் திரும்பி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்தபடி கோவிலுக்கு சென்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 85 ஆயிரம் பேர் தரிசனம் செய்து வரும் நிலையில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் வரும் பக்தர்கள் எரிமேலி உள்ளிட்ட சில பகுதிகளில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேவஸ்தானம் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்க வேண்டும் என முடிவு செய்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பதால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் காவலர்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டும் தேவஸ்தானம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகும் என்பதால் பலர் சன்னிதானத்திற்கு செல்லாமலேயே மற்ற இடங்களில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு திரும்பி வருகின்றனர்.
தொடர்ந்து கூட்டம் அதிகரிப்பதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அதேநேரம் பம்பைக்கு வாகனம் மூலம் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி ஐயப்பன் பக்தர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் பம்பைக்கு வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு கேரள போலீசார் தடை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிமேலி நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிக்கணக்கில் அங்கே பக்தர்கள் காத்திருக்கும் வீடியோ காட்சிகளும், பேருந்தில் ஆபத்தான முறையில் இடம் பிடிக்கும் காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் சிறுவர்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் உணவு இன்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் வாகனங்களில் அடைக்கப்படுவதால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டிசம்பர் 4 ஆம் தேதி முதல் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்ததே தற்பொழுது நிலவும் கூட்ட நெரிசலுக்கு காரணம் என தெரிவித்துள்ள பினராயி விஜயன், பக்தர்கள் கூட்டத்தை சரியான முறையில் ஒருங்கிணைத்து கையாளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. வழக்கமாக எப்பொழுதும் 62 ஆயிரம் பக்தர்கள் நாள் ஒன்றுக்கு வரும் நிலையில், டிசம்பர் 7 ஆம் தேதி மட்டும் ஒரு லட்சம் பேர் சபரிமலையில் குவிந்துள்ளனர். பாதுகாப்பிற்கு பணியமர்த்தப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு,கடந்த ஆண்டுகளைவிட கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.