இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சுழற் பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி(77) உடல் நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற் பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி இன்று (23ம் தேதி) உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார். இவர் கடந்த 1966 முதல் 1978 வரை சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியவர். இந்தக் காலகட்டத்தில் அவர் மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளிலும், 10 ஒரு நாள் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார். கடந்த 1970ம் ஆண்டு பிஷன் சிங் பேடிக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, பிஷன் சிங் பேடி மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது; “மறைந்த கிரிக்கெட் வீரர் பிஷன் சிங்கின் பந்துவீச்சு எண்ணற்ற வெற்றிகளுக்கு இட்டுச்சென்றுள்ளது. வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கு பிஷன் சிங் பேடி தொடர்ந்து ஊக்கமளிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.