நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொன்றாக தொடங்கி வைத்து வருகிறார் பிரதமர் மோடி. இருப்பினும் வந்தே பாரத் ரயில் மீது அவ்வப்போது சில விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் ஒன்று டிக்கெட் பரிசோதகரை விட்டுவிட்டு ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் விட்டுச் சென்ற ரயிலில் ஓடி ஏற முயன்ற டிக்கெட் பரிசோதகர் கீழே விழும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
கடந்த ஜூன் 26 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்லும் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் தன்னை விட்டுவிட்டு ரயில் நகர்வதை அறிந்து ரயிலை நிறுத்தும்படி சைகை காட்டிக்கொண்டே ரயிலில் ஏற முயன்றார். அப்பொழுது திடீரென நிலைதடுமாறி நடைமேடையில் விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.