Skip to main content

பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

bjp congress

 

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை வெளியிடாத அரசியல் கட்சிகளின் சின்னங்களைத் தடை செய்யக்கோரும் வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பீகார் தேர்தல் தொடர்பாக ஒரு உத்தரவினை பிறப்பித்திருந்தது.

 

அதாவது அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தாங்கள் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள்ளாகவோ அல்லது குறைந்தபட்சம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவோ, தங்களுக்கு எதிராக உள்ள வழக்குகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் பீகார் தேர்தலில் இந்த உத்தரவுகளைப் பல அரசியல் கட்சிகள் பின்பற்றவில்லை.

 

இதனையடுத்து இன்று தங்களது உத்தரவைப் பின்பற்றாமல் நீதிமன்றத்தை அவமதித்தற்காக அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அதன்படி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட ஐந்து கட்சிகளுக்கு தலா ஒரு லட்சத்தையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஐந்து லட்சத்தையும் உச்சநீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது.

 

மேலும், உச்சநீதிமன்றம், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தேர்ந்தெடுத்த 48 மணிநேரத்திற்குள் அவர்களுக்கு எதிரான வழக்கு விவரங்களை வெளியிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளதோடு, வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வாக்காளர்கள் எளிதாக அறிய செயலி ஒன்றை உருவாக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்