மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் நான்கு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மீ கட்சி சார்பாக உத்தரபிரதேசத்தின் அலகாபாத் தொகுதியில் பவானிநாத் என்ற திருநங்கை போட்டியிடுகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், அதன்பின் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "நான் அரசியலில் இணைய நினைத்தபோது பல கட்சிகளுடன் பேசினேன். அனால் அனைத்து கட்சிகளும் என்னைப் புறக்கணித்தன. ஆம் ஆத்மீ கட்சி மட்டும் தான் எனது யோசனைகளையும், எண்ணங்களையும் காதுகொடுத்து கேட்டது. என்னைப் போன்றோரை மக்களவைத் தேர்தல் வேட்பாளராக ஆம் ஆத்மி போன்ற கட்சி முன்னிறுத்துவதே இந்த சமூகத்துக்கான மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறேன். என்னால் சமூகத்திற்கு நிறையவே செய்ய இயலும். மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சினைகளைத் தீர்க்க குரல் கொடுப்பேன். இந்த தொகுதியில் கல்வி, தண்ணீர், குடிநீர் பற்றாக்குறை போன்ற பல புரச்சனைகள் நிலவுகிறது. இதனை தீர்க்க நான் நிச்சயம் கடுமையாக உழைப்பேன்" என தெரிவித்தார்.