ரிசர்வ் வங்கியின் உபரிநிதியில் இருந்து ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வாங்கி உபரி தொகையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. மத்திய அரசின் இந்த கோரிக்கையால் எழுந்த சர்ச்சைக்கு பிறகு அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் செய்தார். இந்த நிலையில் எவ்வளவு உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் அறிக்கைபடி 1,76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்குவதாக ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த ராகுல் காந்தி, "பிரதமரும், மத்திய நிதி மந்திரியும் தாங்களே உருவாக்கிய பொருளாதார சீரழிவுக்கு எப்படி தீர்வு காண்பது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் திருடுவது பலன் தராது. இது எப்படிப்பட்டது என்றால், மருந்தகத்தில் இருந்து பிளாஸ்திரியை திருடி, துப்பாக்கி குண்டு காயத்தின் மீது ஒட்டுவது போன்றது ஆகும்" என தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ரிசர்வ் வங்கியிடம் நிதியை வழங்குமாறு மத்திய அரசு கோரிக்கை விடுக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் வல்லுநர் குழு எடுத்த முடிவின்படியே நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும் ரகுல்கந்தி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதற்கு முன்னதாக, தன்னுடைய கட்சியில் உள்ள முன்னாள் நிதியமைச்சர்களை ஆலோசிக்க வேண்டும். இதுபற்றி முதலில் அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளட்டும்" என தெரிவித்துள்ளார்.