Skip to main content

காங்கிரசிலிருந்து விலகுகிறார் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்! பாஜகவில் இணைய முயற்சி?

Published on 01/10/2021 | Edited on 01/10/2021
ff

 

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக அம்ரீந்தர் சிங் ஆட்சி பொறுப்பில் இருந்தார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பிரபல கிரிக்கெட் வீரர் சித்துவை சில மாதங்களுக்கு முன்பு நியமித்தார் காங்கிரசின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி. சித்துவின் நியமனத்துக்கு பிறகே அம்ரீந்தர் சிங்குக்கும் சித்துவிற்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்தபடி இருந்தது. சித்துவிற்கு ராகுல் மற்றும் சோனியாவிடம் அம்ரீந்தர் சிங்  வைத்த குற்றச்சாட்டுகள் கவனிக்கப்படவில்லை. அதேசமயம், அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக சித்து வைத்த குற்றச்சாட்டுகள் வலிமையடைந்தன. ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு அம்ரீந்தர்சிங்கிற்கு கட்சி தலைமையிடமிருந்து அழுத்தம் தரப்பட்டது.  இதனை ஏற்று முதல்வர் பதவியிலிருந்து விலகினார் அம்ரீந்தர். சித்துவின் ஆதரவாளர் முதல்வர் பதவியில் நியமிக்கப்பட்டார். 

 

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து. இது மேலும் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநில காங்கிரசில் ஏக குழப்பங்கள் அதிகரித்தன. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் தலைவர்களில் ஒருவருமான அமீத்சாவை சந்தித்து நீண்ட நேரம் உரையாடிவிட்டு வந்தார் அம்ரீந்தர் சிங்!  காங்கிரஸ் தலைவர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் அவர், அமீத்சாவை சந்தித்து பேசியதால் விரைவில் அவர் பாஜகவில் இணையப்போகிறார் என்ற தகவல்கள் ரெக்கைக் கட்டிப் பறந்தன! இந்த சூழலில் இது குறித்து மனம் திறந்த அம்ரீந்தர்சிங், ‘’ காங்கிரஸ் கட்சியிலும் அரசியலிலும் 52 ஆண்டுகளாக இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை காங்கிரஸ் தலைமை நடத்திய விதம் ஆரோக்கியமாக இல்லை. வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. அதனால், காங்கிரசில் தொடர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. விரைவில் அக்கட்சியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். காங்கிரசின் இளம் தலைவரான ராகுல் காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனையை கேட்பதில்லை. இத்தகை போக்குகள், சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் காங்கிரஸுக்கு நல்லதில்லை. 

 

சித்து முதிர்ச்சியற்றவர். அப்படிப்பட்ட அந்த நபர் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியை எப்படி வழிநடத்துவார் ? என பலமுறை சொல்லியிருக்கிறேன். கேட்க மறுக்கிறார்கள். காங்கிரசில் இருந்து விலகப்போகும் நான் , பாஜகவில் சேரமாட்டேன் ‘’ என்று தெரிவித்திருக்கிறார். அம்ரீந்தர் சிங் இப்படி சொன்னாலும் காங்கிரசிலிருந்து அவர் விலகியதும் நிச்சயம் பாஜகவில் சேர்வார். பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் முதல்வராகவும் முன்னிறுத்தப்படுவார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், அம்ரீந்தர் சிங்கை தங்கள் கட்சிக்குள் கொண்டுவர வலை வீசி வருகிறார்கள். ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அம்ரீந்தர்சிங்கை தொடர்புகொண்டு  இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் பஞ்சாப் காங்கிரசில் செய்தி பரவி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்