![pakistan](http://image.nakkheeran.in/cdn/farfuture/CdBGa3xvJFhffJpjbgD-o0WeXXP4Bxg8ZMnTYD4UPVo/1551891516/sites/default/files/inline-images/pakistan_0.jpg)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கித் தகர்த்ததாக கூறிய கட்டிடங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் படத்தோடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய அரசு தரப்பில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையில்லை என்றும், உயிரிழந்ததாக சொல்லப்படும் பயங்கரவாதிகளின் படங்களை வெளியிடுங்கள் அல்லது தாக்கப்பட்ட இலக்கின் படங்களையாவது வெளியிடுங்கள் என்று நாடு முழுவதும் கேள்விகள் தொடர்கின்றன. அதற்கு அரசுத்தரப்பில் யாரும் உரிய பதில் சொல்லவில்லை. அமித் ஷா 250 பேர் என்கிறார். அலுவாலியா என்ற அமைச்சர் உயிரிழப்பு தொடர்பான விவரங்கள் இல்லை என்கிறார். அரசுத் தரப்பில் மீடியாக்களுக்கு அவசரமாக சொல்லப்பட்ட 350 பேர் பலி என்ற தகவலுக்கு ஆதாரம் என்ன? என்றெல்லாம் பல குழப்பங்கள் நிலவுகின்றன.
இந்நிலையில்தான், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள தனியார் செயற்கைக்கோள் நிறுவனமான பிளானெட் லேப்ஸ், பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்கி அழித்ததாகக் கூறிய பயங்கரவாத முகாம்களின் கட்டிடங்கள் அப்படியே இருப்பதை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.
நான் கட்டிடங்களும் மார்ச் 4 ஆம் தேதி சேதமில்லாமல் இருக்கும் படத்துடன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி, மத்திய அரசு, இந்திய விமானப்படை சொன்ன தகவல்களின் நம்பகத்தன்மையை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.