பிரபல நடிகர் மோகன்லால் மீது கொடநாடு வனத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மோகன்லாலின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் அவரது கொச்சி வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இதை வருமான வரித்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோடநாடு வனத்துறையினர் மோகன்லாலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை திருப்பிக் கேட்டு, அப்போதைய வனத்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார். வனத்துறை சட்டப்படி யானை தந்தங்களை வீடுகளில் வைத்திருக்கக்கூடாது என்று இருந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மோகன்லாலிடம் தந்தங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. அரசின் இந்த செயலை எதிர்த்து, 7 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் ஏலூரைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நடிகர் மோகன்லாலுக்கு எதிராக கோடநாடு வனத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.