சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வனி குமாா், ஹிமாசல பிரதேச தலைநகா் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
1973ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அஸ்வனி குமார் 2008ம் ஆண்டு சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் ஆட்சியில் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற இவர், பின்னர் நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆளுநராகவும் பதவி வகித்தார். இவரின் பதவிக்காலத்தில்தான் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் மாநில அமைச்சராக இருந்தபோது சோராபுதின் ஷேக் என்கவுன்ட்டா் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிம்லாவில் தனது குடும்பத்துடன் வசித்துவந்த இவர் நேற்று மாலை 7 மணியளவில் வீட்டிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, இவரது உடல் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இவரது மரணத்தைக் குறித்து சந்தேகங்கள் எழுந்துவந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் எழுதியதாக கருதப்படும் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், நோய் மற்றும் இயலாமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், "புதிய பாதையை நோக்கி எனது ஆன்மா தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. எனவே, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவசியம். அதேவேளையில், இறுதி சடங்குகளோ, வழிபாடுகளோ எதுவும் தேவையில்லை" என்று கடிதத்தில் அஸ்வனி குமார் எழுதியிருந்ததாக அம்மாநில காவல்துறை கூறியுள்ளது.