இதுவரை இந்திய ரயில்வே வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்தியாவில் நேற்றைய தினம் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் குறித்த நேரத்தில், சரியான ரயில் நிலையங்களை சென்றடைந்ததாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொதுப்போக்குவரத்தில் மிக முக்கிய ஒன்றான ரயில் சேவை, பெரும்பாலான நேரங்களில் கால தாமதம் காரணமாக மக்களின் பொறுமையைச் சோதிப்பது வழக்கம். அதிகளவிலான பயணிகள் ஏற்றிவரும் இந்திய ரயில்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் குறிப்பிட்ட ரயில் நிலையத்தை சென்றடைவது என்பது கடினமான காரியமாகவே உள்ளது. ஆனால், கரோனா ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள இந்த நேரத்தில், பயணிகள் அதிகமில்லாததால் ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கி வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஜூன் 23-ம் இயக்கப்பட்ட ரயில்களில், 99.54 சதவீதம் ரயில்கள் துல்லியமான நேரத்தில் செல்ல வேண்டிய ரயில் நிலையங்களை சென்றடைந்துள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய ரயில்வேயின் இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் இயக்கப்பட்ட 201 ரயில்களும் சரியான நேரத்தில் இயக்கப்பட்டு, சரியான நேரத்தில் குறிப்பிட்ட நிலையங்களை சென்றடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த ரயில்கள் அனைத்தும் அத்தியாவசிய ஊழியர்கள் மற்றும் அவசர தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.