தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றவும், நியமிக்கவும் துணைநிலை ஆளுநருக்கே இறுதி அதிகாரம் உள்ளது என்ற வகையில் மத்திய அரசு உருவாக்கியுள்ள டெல்லி நிர்வாக மசோதா கடந்த 3 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகி 8 மணிநேர விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி நிர்வாக மசோதாவிற்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் டெல்லி நிர்வாக மசோதாவிற்கு எதிராக வாக்களித்த தி.மு.க.எம்.பி.க்கள் வாக்களித்தற்காக நன்றி தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “டெல்லி மக்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் திமுக போராடியதற்கு மனமார்ந்த பாராட்டுகள், 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். இதே போன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.