கேரள மாநிலம் மலப்புரத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் தனூர் பரப்பனங்காடி கடற்கரையில் படகு சவாரி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (7.5.2023) மாலை நடைபெற்ற படகு சவாரியில் 40 பேர் பயணம் செய்த சுற்றுலா படகு திடீரென நீரில் மூழ்கியது. இதில் 30 பேர் நீரில் மூழ்கினர்.
நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 21 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகளும் அடக்கம். படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தனூர் பகுதியில் உள்ள ஒருவரது இல்ல விழாவிற்கு கலந்து கொள்ள வந்தவர்கள் படகு சவாரி செய்ததும் அப்போது படகு கவிழ்ந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி, கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதே போன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.