Skip to main content

வலி இல்லா மரண தண்டனை வழங்குவது குறித்த வழக்கு; மத்திய அரசு புதிய தகவல்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

attorney general venkataramani new message for painless sentence issue

 

டெல்லி உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வலி இல்லாத முறையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கோரி பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அந்த பொதுநல மனுவில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஒரு வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும், ஒருவரை தூக்கிலிடப்படுவதற்கு பதிலாக வலி இல்லாத மாற்று யோசனைகள் குறித்து ஆராய வேண்டும் எனவும், கண்ணியமான மரணம் என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. ஆனால் ஒரு மனிதன் தூக்கிலிடப்பட்டால் அவருடைய கண்ணியம் போய்விடும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் கடந்த 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தூக்கு தண்டனை தவிர மற்ற வழிகளில் கண்ணியமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்த தரவுகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நேற்று (02.05.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி இது தொடர்பாக தகவல் ஒன்றை நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் அளித்தார். அதில்,‘‘தூக்கு தண்டனைக்கு மாற்றாக வேதனை குறைந்த அல்லது வலி இல்லாத மாற்றுத் தண்டனையை வழங்குவது குறித்து ஆராய மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைக்க பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் அது சார்ந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது" என தெரிவித்தார். இதையடுத்து வரும் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்திற்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்