மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து அஜித் பவாரை அதிரடியாக நீக்கி தேசியவாத காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று காலை திடீரென பாஜக ஆட்சியமைத்தது.
மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். அதனையடுத்து தேவேந்திர பட்னாவிஸும், அஜித் பவாரும் பதவி ஏற்றதை எதிர்த்தும், மகாராஷ்டிராவின் ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை எதிர்த்தும் சிவசேனா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்தது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து அஜித் பவாரை அதிரடியாக நீக்கி தேசியவாத காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக உடன் சேர்ந்து ஆட்சி அமைத்ததால் அஜித் பவாரை நீக்கியுள்ளது தேசியவாத காங்கிரஸ்.