Skip to main content

ஆம்ஸ்ட்ராங் படுகொலை - மாயாவதி கண்டனம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Armstrong issue Mayawati condemned

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. 

Armstrong issue Mayawati condemned

ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி) தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முதல்வரின் நேரடி தேர்வு; யார் இந்த அருண் ஐ.பி.எஸ்?

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Background of Arun IPS selection as Chennai Commissioner

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05 ஆம் தேதி இரவு, பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே, வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் நடந்த இந்தப் படுகொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் குற்றச் சாட்டை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் ஆணையராக இருந்த சந்தீப் ரத்தோர், காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த அருண் ஐபிஎஸ், புதிய சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 110-வது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்கவுள்ளார். 

காவல்துறையில் சட்டம் ஒழுங்காக இருந்தாலும், போக்குவரத்து துறையாக இருந்தாலும், குற்ற புலனாய்வாக இருந்தாலும், அதிரடிக்கு பெயர்போனவர் ஐபிஎஸ் அதிகாரியான அருண். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொண்டு பட்டம் பெற்றார். பின்னர், காவல் உடுப்பு மீதும் காவல் துறை மீதும் இருந்த தீராக் காதலால் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்தார். இதையடுத்து, 1998 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அருணுக்கு முதல் பதவியே மிகவும் சென்சிடிவ் ஏரியாவில் கிடைத்தது. நாங்குநேரி ஏஎஸ்பி ஆக தனது கேரியரை தொடங்கிய அருண், தூத்துக்குடி மாவட்டத்திலும் தனது பணியை திறம்பட செய்தார். இதன் காரணமாக அவருக்கு எஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தது. பின் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் எஸ்.பியாக பணியாற்றினார். சட்டம் ஒழுங்கிற்கு அருண் கொடுத்த முக்கியத்துவமும் குற்றங்களை குறைக்க அருண் எடுத்த நடவடிக்கைகளும் அவரை பலரும் வெகுவாக பாரட்டப்படுவதற்கு வழிகுத்தது. அதன் காரணமாகவே, திமுக, அதிமுக என ஆட்சி எதுவாகினும் அங்கு துடிப்பான அதிகாரியாக அருண் கோலோச்சி வந்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அனுபவங்களை பெற்ற பிறகு, அவர் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் முக்கிய நகரமான அண்ணாநகரின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். பின்னர், பரங்கிமலை துணை ஆணையராகவும் பணியாற்றினார். மேலும், தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2012ல் காவல்துறை டிஐஜியாக பதவி உயர்வு பெற்று.. திருச்சி சரக காவல் துணை தலைவராக பணியாற்றினார். மேலும், சென்னை மாநகரில் போக்குவரத்து இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு காவல்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார் அருண். பின் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும் பொறுப்பு வகித்தார்.

2021 ஆம் ஆண்டு மீண்டும் திருச்சி மாநகர காவல் ஆணையராக இரண்டாவது முறையாக பொறுப்பு வகித்தார். திருச்சியில் கொடி கட்டிப் பறந்த லாட்டரி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அருண் ஐபிஎஸ், லாட்டரி அதிபர் உள்ளிட்ட கேங்கை கைது செய்தது பலரையும் புருவம் உயர்த்தச் செய்தது. 2022 ஆம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றார் அருண். இப்படி, வாழ்விலும் பணியிலும் அடுத்தடுத்து உயரங்களைத் தொட்ட அருணுக்கு, இன்னொரு மணிமகுடத்தை திமுக அரசு சூட்டியுள்ளது. ஜூலை எட்டாம் தேதியான இன்று.. சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எவரிடமும் எவ்வித ஆலோசனைகளையும் பெறாமல்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரடியாக சென்னை மாநகர கமிஷனராக நியமித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றிய அருண், புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது அதிரடி நடவடிக்கைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் ரவுடிகள் களை எடுக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில், சென்னை கமிஷனராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து. தலைநகர் ரவுடிகள் நடுக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Next Story

“ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்” - அருண் ஐ.பி.எஸ். அதிரடி!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Action will be taken in a language understood Arun IPS

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் நடந்த இந்தப் படுகொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்கட்சிகள் பலரும் குற்றச் சாட்டை முன்வைத்து வந்தனர்.

இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவில் சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த அருண் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Action will be taken in a language understood Arun IPS

இந்நிலையில் சென்னை மாநகர புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அருண் ஐபிஎஸ், இன்று (08.07.2024) பிற்பகலில் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக அப்போது சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தோர் தனது பொறுப்புகளை புதிய காவல் ஆணையர் அருணிடம் ஒப்படைத்தார். இதன் மூலம் சென்னையின் 110வது காவல் ஆணையர் என்ற சிறப்பை அருண் பெற்றுள்ளார். தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ஆவார். அதோடு  திருச்சி, மதுரையில் காவல் ஆணையராகவும் பதவி வகித்துள்ள்ளார். இவர் ஆவடி மாநகரின் முதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணி ஆகும். சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை கண்டுபிடிக்க போக்குவரத்து சிக்கல்களை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும்போது தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி ஆகும். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். என்னிடம் பொறுப்பை ஒப்படைத்த முதல்வரின் நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன்” எனத் தெரிவித்தார்.