நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில் இன்று 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தி வருகிறார்.
அதில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புதிய வரி முறையில் வருடத்திற்கு ரூ. 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது. ஏற்கனவே ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என இருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் அது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வரி முறையில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2.50 லட்சமாக இருந்த நிலையில் தற்போது ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் புதிதாக 50 விமான நிலையம், ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும். நாட்டின் அனைத்து நகரங்களிலும் இயந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்றும் முறை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.