
கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் இருந்து அசாம் மாநிலம் குவகாத்தி அருகே உள்ள காமக்யா ரயில் நிலையம் வரை காமாக்யா ஏசி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12551) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம் போல் ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே கிழக்கு கடற்கரை ரயில்வேயின் குர்தா சாலை பிரிவின் கட்டாக் - நெர்குண்டி இடையிலான ரயில்வே பிரிவில் உள்ள நெர்குண்டி நிலையம் அருகே இன்று (30.03.2025) காலை சுமார் 11:54 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இது குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர், மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட மூத்த அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணிகளுக்கு என்.டி.ஆர்.எஃப். மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப். குழுவினர் முதலுதவி அளித்தனர். இந்நிலையில் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்து காரணமாக கட்டாக் ரயில் வழித்தடப் பாதையில் ரயில்கள் இயக்கப்படுவது பாதிக்கப்பட்டன.
ரயில் பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாகக் கட்டாக் கிராமப்புற எஸ்.பி. பிரதீக் கீதா சிங் கூறுகையில், “இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், மீட்புப் பணிக்காக மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். நாங்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்க முடிந்தது. காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.