உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் இந்திய இளைஞர்களின் விருப்பமான வீரராக மாறியுள்ளார். வீடு வீடாகச் சென்று சிலிண்டர் போடும் கான்சந்திர சிங் என்வருக்கு 5வது குழந்தையாக பிறந்த ரிங்கு சிங், சிறு வயது முதலே பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு தனது கடின உழைப்பால், தற்போது இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனான மாறியுள்ளார். தனது 16 வயதில் உத்திரப் பிரதேசத்திற்காக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரிங்கு சிங், முதல் போட்டியிலேயே 83 ரன்கள் அடித்து அசத்தினார். அதன்பிறகு ரஞ்சி டிராபியில் உத்திரப் பிரதேச மாநிலத்திற்காக 10 போட்டிகள் விளையாடி 953 ரன்கள் எடுத்து பலரது கவனத்தை ஈர்த்தார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக, ரிங்கு சிங்குவிற்கு பல்வேறு உதவிகள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற ரிங்கு சிங் தனது அதிரடியான பேட்டிங்கால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். அதனால், அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியால் ரூ.13 கோடிக்கு தக்க வைக்கப்பட்டிருக்கிறார். அதேசயம் இந்திய டி20 அணியில் சிறப்பாகவும் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், இளம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை கரம்பிடிக்க உள்ளார். வழக்கறிஞரான பிரியா சரோஜ்(26) உத்தரப்பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது தந்தை துபானி சரோஜ் சமாஜ்வாதி கட்சி சார்பில் மூன்று முறை எம்.பி.யாகவும், தற்போது எம்.எல்.ஏவாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் ரிங்கு சிங்கும், பிரியா சரோஜும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் துபானி சரோஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரிங்கு சிங்கும் பிரியா சரோஜும் கடந்த ஒராண்டாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இரு குடும்பத்தாரின் சம்மதத்திற்காக காத்திருந்தனர். தற்போது அவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டோம். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி ஆகியவற்றை முடிவு செய்யவுள்ளோம். மேலும், ரிங்கு சிங்கிற்கு கிரிக்கெட் போட்டி இல்லாத நேரத்தில் இருவருக்கும் திருமணத்தை நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்தார்.