மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை நாடாளுமன்றத்தில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இது குறித்து பல்வேறு கேள்விகளை ஆளும் பாஜக அரசிடம் முன்வைத்து வருகின்றன. அண்மையில் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு மணிப்பூருக்கு நேரில் சென்று இரு குழுக்களாக ஆய்வு செய்தது.
21 எம்.பி.க்கள் கொண்ட இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். கடந்த 4 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். மறுபுறம் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திட்டமிடல்களை முன்னிறுத்தி 'இந்தியா' கூட்டணியானது மூன்றாம் கட்ட ஆலோசனைக்குத் தயாராகி வருகிறது.
இந்நிலையில், நாளை மணிப்பூர் வன்முறை தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை 'இந்தியா' கூட்டணி கட்சியினர் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. நாளை காலை 11 மணிக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த குழுவினர் அவரைச் சந்திக்கத் திட்டமிட்ட நிலையில், தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.