
இந்தியாவில் முதன்மை கட்சியாக பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. இந்து மதத்தை முன்னிறுத்தும் இக்கட்சி, இஸ்லாம் மதத்திற்கு எதிரான கட்சி என்ற குற்றச்சாட்டும் ஒரு பக்கம் இருக்கிறது. இதனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பா.ஜ.கவை விமர்சித்து வருகின்றன.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே பா.ஜ.க கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். மும்பையில் பேரணி சென்ற உத்தவ் தாக்கரே மக்களிடம் பேசியதாவது, “பா.ஜ.க இந்த சமூகத்தை பிரிக்கும் அரசியலை செய்து வருகிறது. அரசியலமைப்பு சட்டம், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை கொடுத்துள்ளது. ஆனால், பா.ஜ.க சிறுபான்மையினருக்கு அச்சத்தை உண்டாக்குகிறது. குறிப்பிட்ட சமூகத்தை குறிவைப்பதற்குப் பதிலாக வளர்ந்து வரும் வேலையின்மை, விவசாய துயரம் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை பா.ஜ.க நிவர்த்தி செய்ய வேண்டும்.” என்று கூறினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “நாங்கள் எந்த மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், இந்தியா வாழ்ந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு மட்டுமே எதிரானவர்கள். உத்தவ் தாக்கரேவின் பேரணியில், பாகிஸ்தான் கொடி பரப்பதை நாங்கள் கண்டோம். இது போன்ற செயல்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அவர்கள் கொண்டாடுவார்கள். அவர்களுக்கு தான் நாங்கள் எதிராக இருக்கிறோமே தவிர, எந்த சமூகத்தினருக்கும் அல்ல.
மகாராஷ்டிராவில் இந்து மற்றும் முஸ்லிம்களிடையே ஒற்றுமை மற்றும் மரியாதை இருக்கிறது. பாஜக அனைவரையும் அழைத்துச் செல்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது. விமர்சனங்களை வைப்பதற்கு பதிலாக உத்தவ் தாக்கரே, தனது கட்சி சீரமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, அவரது கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து விலகிச் செல்லும் அதே வேளையில், எங்கள் தொடர்புகளை விரிவுபடுத்துவோம். தனது சொந்தத் தொண்டர்கள் ஏன் அவரைக் கைவிடுகிறார்கள் என்பதை அவர் சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.