ஆந்திரா மாநிலத்தில் இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து பாஜக, பவன் கல்யாணின் ஜன சேனா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றதில் இருந்து, முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என்று குற்றம்சாட்டி வருகிறார். அந்த வகையில் ஜெகன்மோகனின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி இருந்தார்.
இதனையடுத்து திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டன. இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்தும், கடந்த ஆட்சியின்போது லட்டு தயாரிப்பில் நடந்த தவறுகள் குறித்தும் இன்று (20.09.2024) மாலைக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேலும் திருப்பதி ஏழுமையான் கோயிலின் மாண்பு, பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு இடையூறு விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மாலை செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.