கர்நாடக மாநிலத்தில் தும்கூரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடனான மன வேறுபாட்டால் விவாகரத்து வேண்டி தனது 59 ஆவது வயதில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு 10 வருடங்களுக்கும் மேலாக நிலுவையிலிருந்தது.
இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற லோக் அதாலத் முறையில் அந்த வழக்கும் பங்கேற்றது. அதில் இருவரிடமும் சமரசம் பேசப்பட்டது. சமரசத்தில் சமாதானம் அடைந்த தம்பதியினர் தாங்கள் சேர்ந்து வாழ்வதாக விருப்பம் தெரிவித்தனர்.
இவர்கள் மீண்டும் இணைவதற்கு இவர்களது குடும்பத்தினரும் விடா முயற்சியாகப் பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். இதனால் நாங்கள் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தம்பதிகள் தெரிவித்தனர்.
மேலும், தாங்கள் பிரிந்து வாழ்வதற்காக எந்த நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டனரோ அதே நீதிமன்றத்தில் இருவரும் மாலை மாற்றி தங்களது உறவைப் புதுப்பித்துக் கொண்டனர்.
இந்த தம்பதியுடன் சேர்ந்து மேலும் 5 தம்பதிகள் தங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டு விவாகரத்தைத் திரும்பப் பெற்று நீதிமன்ற வளாகத்திலேயே மாலையை மாற்றி ஒன்றாகச் சேர்ந்தனர். இந்நிகழ்வு அங்கிருந்தவர்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.