
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண் நடன ஆசிரியரை, தாயார் ஒருவர் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், அர்ஜுன் ஜெய்ஸ்வால் என்பவர் நடன ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், பேருந்து நிறுத்துமிடங்கள் மற்றும் கழிவறைகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று தகாத முறையில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, பள்ளியில் படிக்கும் 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த சிறுமியின் பெற்றோர், பள்ளிக்கு வந்து அர்ஜுன் ஜெய்ஸ்வாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் தாயார், ஆசிரியர் அர்ஜுனின் கன்னத்தில் சரமாரியாக அறைந்தார். அவர் மட்டுமல்லாது சிறுமியின் குடும்பத்தினரும், அர்ஜுனை கடுமையாக தாக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் அர்ஜுன் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். ஆசிரியரை, சிறுமியின் தாயார் அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.