பிரதமர் மோடி நேற்று (04-03-24) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்து கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையில் கோர் லோடிங் பணியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். அதன்பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தனம் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெற்ற பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அதில் பேசிய அவர், “காங்கிரஸ், தி.மு.க மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஊழலில் ஊறிப்போய் உள்ளன. அவர்களுக்கு அவர்களுடைய குடும்பம் தான் எல்லாம். ஊழல்தான் அனைத்தும். பல தசாப்தங்களாக, இப்படிப்பட்ட அரசியலை செய்து பழகிவிட்டன. இதன் காரணமாக தான், நமது தேசிய இளைஞர்கள், அரசியல் மீது வெறுப்படைந்துள்ளனர். நேற்று வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு, தூய்மையான அரசியலுக்கு பெரும் உந்து சக்தியாக இருக்கும்” என்று கூறினார்.
பிரதமர் மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விவரம்:-
கடந்த 1993ஆம் ஆண்டு, பிரதமராக பொறுப்பு வகித்து வந்த நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, அந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதற்காக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த சிபுசோரன் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், சிபுசோரன் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இதனையடுத்து, கடந்த 1998ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நாடாளுமன்ற அவையில் பேசவோ, ஓட்டு போடவோ லஞ்சம் வாங்கும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு தொடர்வதில் இருந்து அரசியல் சட்டத்தின் 105 (2) மற்றும் 194 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் சட்ட பாதுகாப்பு அளிப்பதாக’ தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில், மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், சிபுசோரனின் மருமகனும், அப்போதைய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏவுமான சீதா சோரன், லஞ்சம் பெற்றுக்கொண்டு அணி மாறி வாக்களித்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில், சி.பி.ஐ சீதா சோரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையே, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீதா சோரன் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அவர் அளித்த அந்த மனுவை, ஜார்க்கண்ட் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து சீதா சோரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவில், ‘கடந்த 1998ஆம் ஆண்டில் வெளியான தீர்ப்பில் தனது மாமனார் சிபுசோரனுக்கு உச்சநீதிமன்றம் அளித்த சட்ட பாதுகாப்பு எனக்கும் பொருந்தும். எனவே, அரசியலமைப்பு சட்டம் 194 (2)ன்படி, ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்வதில் இருந்து விலக்கு வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை ஜார்க்கண்ட் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இதன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு நேற்று (04-03-24) இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், ‘கடந்த 1998ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புப்படி, லஞ்சம் வாங்கும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் சட்ட பாதுகாப்பு கோர முடியுமா என்ற சர்ச்சையின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்யப்பட்டது. அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றத்திற்கு உடன்பாடு இல்லை. எனவே, அது நிராகரிப்படுகிறது.
1998ஆம் ஆண்டின் தீர்ப்பு, அரசியல் சட்டத்தின் 105 (2), 194 (2) ஆகிய பிரிவுகளுக்கு முரணாக உள்ளது. உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி முடிவு எடுத்து பேசலாம், வாக்களிக்கலாம். ஆனால், அதற்கு லஞ்சம் வாங்கினால், அது அவரது விருப்பத்தை பிரதிபலிக்காது. லஞ்சம் வாங்குவது குற்றம். லஞ்சம் வாங்கியவுடனே அவருக்கான சட்ட பாதுகாப்பு விலகிவிடுகிறது. எனவே, அவர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவதில் இருந்து சட்ட பாதுகாப்பு கோர முடியாது. மேலும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அவைகளில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் லஞ்சம் பெற்றால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்படும்’ என்று தெரிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.