அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 20 மாவட்டங்களில் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் வீடுகள், பாலங்கள், சாலைகள் ஆகியவை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 27,452 பேர் 273 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அசாமில் இதுவரை நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் அருணாச்சல பிரதேசத்தில் 4 பேர் நிலச்சரிவால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 57,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அசாமில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் லும்டிங், படார்பூர் ஆகிய பகுதிகளில் இரண்டு நாட்களாக ரயில்களை விட்டு வெளியேற முடியாமல் தவித்த ஏறத்தாழ 2,800 பயணிகள் மீட்புப்படையினரால் மீட்கப்பட்டனர். தற்பொழுது 10 ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் திமா ஹசாவ்வில் வெள்ளத்தில் அங்குள்ள ரயில் பெட்டிகள் கனமழை மற்றும் வெள்ளத்தில் கவிழ்ந்துவிழும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.