அண்மையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, “இந்தியா உலக அரங்கில் போட்டி போட வேண்டுமானால், நமது இளைஞர் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்; அவர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தொழிற்சங்கம், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அவரது கருத்தில் இருந்து பின் வாங்காமல் தொடர்ந்து இதனையே வலிறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், இளைஞர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பிறந்த எஸ்.என்.சுப்பிரமணியன் எல் அண்ட் டி நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பொறியாளராக சேர்ந்துள்ளார். பின்பு அவரது திறமையால், தற்போது அந்நிறுவனத்தின் தலைவராக உருவெடுத்துள்ளார்.
இந்த சூழலில் தனது நிறுவன ஊழியர்களுடன் உரையாடிய எஸ்.என்.சுப்பிரமணியன், ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை வாங்க முடியாததற்கு வருத்தம் அடைகிறேன்; ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை பார்க்க வைத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம்தான் வீட்டில் மனைவியின் முகத்தை உற்றுப் பார்க்க முடியும்? அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், சீனர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்வதாகவும், அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் வேலை செய்வதாகவும் எனது சீன நண்பர் ஒருவர் கூறினார். அதனால் சீனா அமெரிக்காவை பின் தள்ளி விரைவில் முன்னேறும் என்றும் கூறினார். ஆகையால் நாம் உலகின் முன்னணி நாடாக வளர வேண்டும் என்றால் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்” என்றார்.
90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக உழைப்பாளர்களின் மனைவி குறித்து எஸ்.என்.சுப்பிரமணியன் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியது. உலகின் பல்வேறு நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்று திட்டம் நடைமுறையில் இருக்கும் போது, இந்தியர்கள் வாரத்திற்கு 7 நாட்களும் உழைக்க வேண்டும் என்று எஸ்.என்.சுப்பிரமணியன் கூறுவது முதலாளித்துவத்தின் அதிகார போக்கைக் காட்டுவதாக பலரும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், எனது மனைவி அற்புதமானவர்; அவரை பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்த்ரா தெரிவித்துள்ளார், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆனந்த் மஹிந்திராவிடம், எத்தனை மணி நேரம் நீங்கள் வேலை செய்வீர்கள்? என்று கேட்டக்கபட்டது. அதற்கு, “எத்தனை மணி நேரம் வேலை செய்வீர்கள் என என்னிடம் கேட்காதீர்கள்; வேலையின் தரம் குறித்துக் கேளுங்கள் என்று பதிலளித்தார். மேலும் எனது மனைவி அற்புதமானவர்; அவரை பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.