ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தேர்தல் தோல்வி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் மாதம் 30- ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 65.17% வாக்குகள் பதிவான நிலையில், நேற்று வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் அம்மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமித்ஷா, "ஜார்கண்ட் வாக்காளர்களின் தீர்ப்பை பா.ஜனதா மதிக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா தொடர்ந்து பாடுபடும். கடந்த 5 ஆண்டுகள் ஜார்கண்டை ஆள வாய்ப்பளித்த அம்மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தலில் அயராத பாடுபட்ட பா.ஜனதா தொண்டர்களை பாராட்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல இந்த தேர்தல் முடிவுகள் குறித்த கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "மாநிலத்துக்காக பாடுபட நல்வாழ்த்துகள். பல ஆண்டுகள் ஆட்சி செய்ய பா.ஜனதாவுக்கு வாய்ப்பளித்த ஜார்கண்ட் மக்களுக்கு நன்றி. கட்சி தொண்டர்களையும் பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.