திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர்.