Skip to main content

நாகாலாந்தில் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு - கடும் எதிர்ப்புக்கிடையே மத்திய அரசு முடிவு!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

nagaland

 

நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்தில் கடந்த 4ஆம் தேதி இரவு, பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு அப்பாவிகள் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் என நினைத்து அப்பாவிகளைப் சுடப்பட்டதாக பாதுகாப்பு படை கூறும் நிலையில், இந்த துப்பாக்கி சூட்டை தொடர்ந்து கிராம மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் மேலும் ஏழு பொதுமக்கள் உயிரிழந்தனர். இதன்பின்னர் ஐந்தாம் தேதி நடைபெற்ற வன்முறையில் மேலும் ஒரு நபர் பாதுகாப்புப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

இந்த சம்பவம் குறித்து நாகாலாந்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராணுவமும் விசாரணை நடத்திவருகிறது. இந்தசூழலில் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என நாகாலாந்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாகாலாந்தின் ஐந்து கிழக்கு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடியின இயக்கமான கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பும் (ஈஎன்பிஓ), ராணுவத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்ததுள்ளது. அப்பாவிகளை சுட்டுக்கொன்றவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அளித்த விளக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும், ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோரியுள்ள அந்த அமைப்பு, இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற தேசிய விழாக்கள் கொண்டாடப்படாது, ஆட்சேர்ப்பு இயக்கம் அனுமதிக்கப்படாது. ராணுவ குடிமைத் திட்டங்களில் மக்கள் பங்கேற்க மாட்டர்கள் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

இதனிடையே நாகலாந்து சட்டமன்றத்தில் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தை வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும், குறிப்பாக நாகலாந்தில் இருந்தும் திரும்பப் பெற வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம், நாகாலாந்தில் இருந்து  ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெறுவது குறித்து ஆராய குழு அமைத்தது.

 

இந்தசூழலில் தற்போது நாகாலாந்தில் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கை மீறுவதாக தாங்கள் கருதும் நபர்கள் மீது முன் அனுமதியின்றி தாக்குதல் நடத்தும் அதிகாரத்தைப் பாதுகாப்புப் படைகளுக்கு ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டம் வழங்குகிறது. இந்தச் சட்டம் நாகாலாந்து, அசாம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் அமலில் இருந்துவருகிறது. இந்தச் சட்டத்தை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்