பாதுகாப்புத்துறையில் 'அக்னிபத்' திட்டம் மூலம் தற்காலிக வேலை வழங்க முக்கிய அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நிலையான எதிர்காலம் இல்லாத நிலைக்கு பாதுகாப்புப்படை இளம் வீரர்கள் தள்ளப்படுவார்கள் என ராகுல் காந்தி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், "பாதுகாப்பு விசயத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவது நாட்டின் எதிர்காலத்தை அபாயகரமாக்கிவிடும்" என்று தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், "அக்னிபத் திட்டம் வறுமையில் உள்ள மக்களின் துயரத்தை மேலும் அதிகமாக்கும்" என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற இளைஞர்களின் கனவை நான்கு ஆண்டுகளாக சுருக்குவதை ஏற்க முடியாது" எனக் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு, இளைஞர்களின் வேலை வாய்ப்பு என்ற இரண்டு பொறுப்புகளையும் மத்திய அரசு கைகழுவிட்டது என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கடுமையாக விமர்சித்துள்ளது.
மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.