சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீப காலமாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகளவு இருந்து வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது கரியாபந்த் தொகுதியில் நக்ஸலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்தோ திபெத்திய எல்லை பிரிவைச் சேர்ந்த ஜொகிந்தர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வெடிகுண்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், சத்தீஸ்கரின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் நக்ஸலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், அதிகப்படியான எல்லைப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த வகையில், கடந்த மாதம் 30ஆம் தேதி அப்பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரை நோக்கி நக்ஸலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
இந்த அதிரடி தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 வீரர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த பாதுகாப்பு வீரர்கள் மீட்கப்பட்டு ராய்ப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் நக்ஸலைட்டுகள் 6 கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து, உயிரிழந்த வீரர்களில் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், நக்சலைட்டுகள் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பகுதியில் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 3 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.