ஐந்து வயது குழந்தை ஒரு கிராமத்தையே தவறுதலாக எரித்து சாம்பலாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபருக்காபாத் பகுதியில் உள்ளது ஜண்டி கி மாண்டியா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது குழந்தை ஒன்று, எரிந்துகொண்டிருந்த தீக்குட்சியை தவறுதலாக தனது வீட்டின் கூரையில் வீசியுள்ளது. இதில் சில நொடிகளில் பற்றிக்கொண்ட தீ, மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. மிகவும் பின்தங்கிய கிராமம் என்பதால், அங்குள்ள வீடுகள் முழுவதும் வைக்கோல், தார்ப்பாய் மற்றும் டின்களால் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட அறுபது வீடுகள் இருக்கும் இந்த கிராமத்தை ஒட்டுமொத்த சூறையாடியது நெருப்பு.
எளிதில் அணுக முடியாத தூரத்தில் இந்த கிராமம் இருப்பதால், ஒரேயொரு தீயணைப்பு வீரர் மட்டுமே சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். பல மணிநேர போராட்டத்திற்குப் பின்பு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றாலும், கிராமத்தில் உள்ள மொத்த வீடுகளும் எரிந்து சாம்பலாகின. இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. வீடுகளை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தவறுதலாக இந்த விபத்து நடந்ததால், குழந்தை அல்லது குடும்பத்தினர் யார்மீதும் வழக்கு பதியப்படவில்லை.