மோடியின் படிப்பு சான்றிதழை பிரதமர் அலுவலகம் வழங்கத் தேவையில்லை என குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ்கள் தொடர்பான சர்ச்சை பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது. 1978 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பும், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பும் படித்தார் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் 1978-ம் ஆண்டு மற்றும் 1983 ஆம் ஆண்டு படித்த அனைத்து மாணவர்கள் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டிருந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ் குறித்த விவரங்களை வழங்கலாம் என மத்திய தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இன்று வெளியான தீர்ப்பில், மோடியின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரி, குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் பொது தகவல் அதிகாரிகள் வழங்குமாறு உத்தரவிட்ட மத்திய தலைமை தகவல் ஆணையத்தின் உத்தரவை நீதிபதி பீரன் வைஷ்ணவ் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் சான்றிதழ் பற்றிய விவரங்களைக் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.