சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 5,080 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,37,702 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 85 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு சந்தேகத்தில் சிகிச்சை பெற்ற 5 பேர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா நாக்பூர் மாயோ மருத்துவமனையில் கரோனா சந்தேகத்தில் 5 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகளுக்காக மருத்துவர்கள் காத்திருந்த நிலையில் 5 பெரும் தப்பியோடியுள்ளனர். ஆய்வில் தப்பியோடிய 5 பேரில் ஒருவருக்கு கரோனா இல்லை என தெரியவந்துள்ளது. 5 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
தப்பியோடிய 5 பெரும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள் என நாக்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.