
தமிழக சட்டமன்றப் பேரவையில், இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று (25.03.2025) கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்.
மொழிக் கொள்கையில் தமிழ்நாடு வகுத்துள்ள பாதையும், அதன் உறுதியான நிலைப்பாடுமே சரி என்பதை நமது அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களும் இப்போது உணர்ந்து வருவதைப் பார்க்கிறோம். இன்னொரு மொழியைத் திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்று விடும் என்பதை நாம் வரலாற்றுப் பூர்வமாக உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில்தான் இருமொழிக் கொள்கையைச் சிக்கெனப் பிடிக்கிறோம். இந்தி மொழித் திணிப்பு என்பது, ஒரு மொழித் திணிப்பு மட்டுமல்ல: பண்பாட்டு அழிப்பாக அமையும் என்பதால்தான் இதில் உறுதியாக இருக்கிறோம்; இருப்போம். இந்த மொழித் திணிப்பின் மூலமாக மாநிலங்களை, மாநில மொழிகளை, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
மாநிலங்களை தங்களது கொத்தடிமைப் பகுதிகளாக நினைப்பதால்தான் இதுபோன்ற மொழித் திணிப்புகளும், நிதி அநீதிகளையும் செய்கிறார்கள். எனவே, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைக் காக்கவும் மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ்மொழியையும் காக்க முடியும். தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிப்படத் தெரிவித்து, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்” எனப் பேசினார்.