Skip to main content

முடிந்தது கெடு! பில்கிஸ் பானு வழக்கில் இன்று என்ன நடக்கும்?

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
11 convicts should surrender today

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் கைதாகி நீதிமன்றத்தினால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு கடந்த ஆண்டு விடுதலை செய்திருந்தது. அதாவது கோத்ரா வழக்கு தொடர்பாக குஜராத் அரசு அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின்படி நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகக் கூறி குஜராத் அரசாங்கம் அவர்களைக் கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக, அவர்கள் விடுதலையின்போது சிறை வாசலிலேயே மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது சர்ச்சையாகி மேலும் பல விவாதங்களைக் கிளப்பி இருந்தது. அதே சமயம் இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது எனக்  குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், நாகரத்தினா அமர்வு முன்பு கடந்த 8ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருவதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது. மேலும் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையை காப்பது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் 2 வாரங்களில் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், குற்றவாளிகள் 3 பேர் தரப்பில், சரணடைய மேலும் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், ‘சட்ட ஆலோசனை பெற நேரம் தேவை என்றும், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் சரணடைய அவகாசம் வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், குற்றவாளிகள் தொடுத்திருந்த மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த 19ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் வழங்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், குற்றவாளிகள் வரும் 21ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்று கூறி கண்டித்தது. 

குற்றவாளிகள் 11 பேர் சரணடைய உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால், அவர்கள் இன்று சரணடைய வேண்டும். அப்படி சரணடைய தவறினால், 11 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கும். அவர்களாக சரணடையாமல், காவல்துறை கைது செய்தால், அந்த 11 குற்றவாளிகளும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் எதிர்கொள்ள நேரும். 

சார்ந்த செய்திகள்