ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வகையில், மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களின் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், நாட்டில் முதன் முறையாக சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதற்கான விழா நேற்று (04-12-24) நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 3 புதிய குற்றவியல் சட்டங்களை சண்டிகரில் அமல்படுத்திய பிரதமர் மோடி பேசியதாவது, “புதிய குற்றவியல் சட்டங்கள் அனைத்து குடிமக்களின் நலனுக்காக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்கான உறுதியை பிரதிபலிக்கிறது.
பிரிட்டீஸ் காலனித்துவ காலத்தில் கொண்டுவந்த பழைய சட்டங்களின் நோக்கம், இந்திய மக்களை தண்டிப்பதற்கும், அட்டூழியங்கள் செய்வதற்கும் ஊடகமாக இருந்தன. 1860 இல், அவர்கள் ஐபிசி (IPC) ஐக் கொண்டு வந்தனர். அந்தச் சட்டங்களின் நோக்கம் இந்தியர்களைத் தண்டிப்பதும் அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதும் ஆகும். ஆனால், இந்த புதிய குற்றவியல் சட்டங்களின் வரவு, காலனித்துவ காலச் சட்டங்களின் முடிவை குறிக்கின்றன” என்று கூறினார்.