Skip to main content

திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்; முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு வாய்ப்பு!

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Trinamool Congress Candidate List; Opportunity for former cricketer

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதே போன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று (10.03.2024) வெளியிட்டார். இந்த 42  வேட்பாளர்களையும் ஒரே மேடையின் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்தார்.

அதன்படி கிருஷ்ணாநகர் தொகுதியில், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹூவா மொய்த்ரா போட்டியிடுகிறார். பஹ்ராம்பூர் தொகுதியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் போட்டியிடுகிறார். மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹாசன்லால் தொகுதியில் சத்ருகன் சின்க்ஹா போட்டியிடுகிறார். 

சார்ந்த செய்திகள்