Skip to main content

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் ஆட்சேபம் இல்லை! - ரஞ்சித்திடம் ராகுல் காந்தி பளீர்!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018


பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களின் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக இயக்குநர் பா.ரஞ்சித் தகவல் அளித்துள்ளார்.

முன்னதாக, இயக்குநர் பா.ரஞ்சித்தும், நடிகர் கலையரசனும் டெல்லியல் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.

மேலும் அதில், த மிழில் மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித்தை நேற்று டெல்லியில் சந்தித்தேன். அப்போது அரசியல், திரைப்படங்கள் மற்றும் சமுதாயம் குறித்து பேசினோம். இந்த கலந்துரையாடலால் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இதுபோன்ற உரையாடல்களை தொடர்ந்து எதிர்நோக்குவோம் என கூறியிருந்தார்.

இயக்குநர் ரஞ்சித் இயக்கிய திரைப்படங்கள் குறித்து பல்வேறு தகவல்களை ராகுல் காந்தியிடம் அவருடன் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களை நேரில் சந்திக்க ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். இதன்பேரில் ரஞ்சித் மற்றும் கலையரசன் ராகுலை சந்திக்க டெல்லி சென்றுள்ளனர். அங்கு ராகுலின் இல்லத்தில் வைத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக உறையாடியுள்ளனர்.
 

 

 

இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள், சாதிய பாகுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இதில் மிக முக்கியமாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை எப்போது என ரஞ்சித் ராகுலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ராகுல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்வதில் எங்களது குடும்பத்திற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அது தொடர்பாக நாங்கள் எந்த ஒரு முடிவுக்கு வருவதற்கும் தயாராக உள்ளோம் என அவர் கூறியுள்ளார். தானாக அழைத்த விருந்தாளியிடம் ராகுல் காந்தி தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளது அரசியலில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில், மத்திய அரசு நினைத்தால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்நிலையில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகம் வழுவாக வைக்கும் போது, ராகுலின் இந்த கருத்து மிக முக்கியமானதாக பார்க்கப்படும்.

 

சார்ந்த செய்திகள்