பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, தமிழகத்திற்கு நேற்று (31.03.2021) வந்தார் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத். கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் யோகி!
கோவைக்கு அவர் வந்தபோது, பாஜக தொண்டர்கள் நடத்திய அராஜகம், வன்முறைகள் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவியது.
இந்த நிலையில், பாஜகவின் அராஜகத்தைக் கண்டித்தும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிற்கு புகார் அனுப்பியுள்ளார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் குணங்குடி ஆர்.எம்.அனீபா.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அனீபா, "கோவையில் நடத்திய வன்முறை ஜீரணிக்க முடியாத விசயம். இந்த வன்முறையால் முஸ்லிம் வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது. அதனால் முஸ்லிம் வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்றும், கோவை வன்முறை சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரிக்குப் புகார் அனுப்பியுள்ளேன். புகாருடன் வன்முறை சம்பவத்துக்கு ஆதரமான வீடியோவையும் இணைத்திருக்கிறேன்" என்கிறார் குணங்குடி ஆர்.எம்.அனீபா.