கொலைக் குற்றவாளியைப் பிடிக்க சென்ற தனிப்படையின் காவலர் ஒருவர், ரவுடி வீசிய வெடி குண்டு வீச்சில் பலியானார். தொடர்ந்து தப்பிய ரவுடியை துரத்திய தனிப்படையின் துப்பாக்கி சூட்டில் ரவுடி கொல்லப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தென்மாவட்டத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல் பகுதியை ஒட்டிய மங்கலக்குறிச்சியைச் சேர்ந்த உறவினர்கள் ராமச்சந்திரன் மற்றும் வினோத். உறவினர்களான இவர்கள் கடந்த 2015ல் ஏரல் காவல் சரக பகுதிக்குட்பட்ட மங்கலக்குறிச்சியில் படுகொலை செய்யப்பட்டனர். ஏரல் காவல்நிலையத்தில் 102/2015 குற்ற எண் வழக்காக பதிவு செய்யப்பட்டதின் குற்றவாளிகளில் மேல மங்கலக்குறிச்சியைச் சேர்ந்த துரைமுத்து அவனது தம்பி கண்ணன் இருவரும் குற்றவாளிகளாவார்கள்.
இந்த வழக்கு ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்திருக்கிறது. அந்த வழக்கில் விசாரணையின் பொருட்டு கடந்த 2019ல் துரைமுத்துவும் அவனது தம்பி கண்ணனும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டுத் திரும்பும் போது பலியான ராமசந்திரனின் வகையறாக்கள் அவர்களைப் பழிக்கு பழியாக போட்டுத்தள்ள முயன்றபோது துரைமுத்து தப்பிவிட கும்பலிடம் சிக்கிக்கொண்ட கண்ணன் படுகொலை செய்யப்பட்டார்.
இதனால் துரைமுத்து, ராமசந்திரனின் தரப்புகள் மீது ஆத்திரத்திலிருந்திருக்கிறார். துரைமுத்துவின் மீது ஏற்கனவே 302 பிரிவு இரண்டு கொலை வழக்குகள் இரட்டைக்கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன் காரணமாக ஏரல் காவல் நிலைய பதிவேட்டில் அவனது பெயர் ரவுடி பேனலில் பதிவாகியிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு போன ரவுடி துரைமுத்து அண்மையில்தான் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.
தனக்கெதிரானவர்களைப் பழி தீர்க்கவும், குறிப்பாக தனது தம்பி கண்ணைக் கொன்றவர்களைப் பழிக்கு பழிவாங்கும் பொருட்டு வெடிகுண்டு ஆயுதங்கள் சகிதம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள மணக்கரைக் காட்டில் பதுங்கியிருந்திருக்கிறான் ரவுடி துரைமுத்து. தகவலறிந்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எஸ்.ஐ. முருகப்பெருமாள் தலைமையிலான 5 பேர்களடங்கிய தனிப்படையினர் அவனைப் பிடிப்பதற்காக விரைகின்றனர் இந்த தனிப்படையில் ஒருவர்தான் காவலர் சுப்பிரமணியம்.
காட்டில் மறைந்திருந்த துரைமுத்துவை தனிப்படை வளைத்தபோது அவன் தப்பியோடிருக்கிறான். அது சமயம் தனிப்படை அவனை விரட்டிய போது முன்னால் பாய்ந்து சென்றிருக்கிறார் காவல் சுப்பிரமணியம். தன்னை நெருங்கி விட்ட காவலர் சுப்பிரமணியன் மீது ரவுடி துரைமுத்து திடீரென வெடிகுண்டை வீசியிருக்கிறான். பயங்கரமாக வெடித்த அந்த வெடிகுண்டால் தலை மற்றும் உடல் பகுதிகளில் படுகாயமடைந்த காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தொடர்ந்து தனிப்படை அவனைப் பிடிக்க முற்பட்டதில், ரவுடி வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் அவனது கை, கால், மார்புகளில் காயமேற்பட்டிருக்கிறது. மருத்துவமனை சிகிச்சைக்காகக்கொண்டு செல்லப்பட்டபோது வழியில் துரைமுத்து மரணமடைந்திருக்கிறான் என்றும், தப்பியவனை போலீஸ் சுட்டதில் பலியானான் என்றும் தகவல்கள் கிளம்புகின்றன.
எஸ்.பி.யான ஜெயக்குமாரோ வழக்கின் பொருட்டு மற்றும் பிறரை பழிவாங்கும் விதமாக காட்டில் பதுங்கியிருந்த ரவுடியை தனிப்படை வளைத்தில் அவனது குண்டு வீச்சால் காவலர் சுப்பிரமணியன் மரணமானார். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்.