நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை இரண்டாவது நாளாக மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் நடைபெற்று வரும் நிலையில் அதிக கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.50 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 740 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று மாலை 4 மணி அளவில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தேங்கியுள்ள நீர் படிப்படியாக வடிய தொடங்கியுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை ஓய்ந்ததால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியிலிருந்து 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு குறைந்ததால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கின் ஆக்ரோஷம் குறைந்துள்ளது. நேற்று வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் இன்று தாமிரபரணியில் சுமார் 4000 கன அடி நீர் செல்கிறது.
வைகையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது நாளாக எச்சரிக்கை தொடர்கிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்துள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,150 கன அடியாக உள்ளது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மூன்றாவது முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 71 அடி மொத்த உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 69 அடியாக உயர்ந்ததால் இந்த மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணை முழு கொள்ளளவு எட்டியவுடன் உபரி நீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.