
கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன. புதிய கல்விக் கொள்கையில் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். மேலும், மத்திய பா.ஜ.க அரசு மும்மொழி கல்விக் கொள்கை என்று கூறி மறைமுகமாக இந்தியை தமிழ்நாட்டிற்குள் திணிக்க முயற்சி செய்கிறது என்று தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டே இருக்கிறது.
அதே சமயம் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் மூன்றாவது மொழியை கற்றுக்கொண்டால் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக் கூடும் என்று பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் கல்வி தொடர்பான நிதி ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த சர்ச்சையான சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் வாழ மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பையாஜி ஜோஷி கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் பையாஜி ஜோஷி கூறுகையில், “மும்பைக்கு ஒரு மொழி கூட இல்லை. மும்பையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி மொழி உள்ளது. காட்கோபர் பகுதியின் மொழி குஜராத்தி. எனவே நீங்கள் மும்பையில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் மராத்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார். அவரது பேச்சு மகாராஷ்டிரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ வாரியங்களுடன் இணைக்கப்பட்ட தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, மராத்தி மொழியை கட்டாயமாக்கியிருக்கும் நேரத்தில், ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கள் எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில், சிவசேனா உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “இதுதான் பாஜகவின் மறைக்கப்பட்ட திட்டம். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். நான் முதல்வராக இருந்தபோது மாநிலத்தில் மராத்தி மொழியை கட்டாயமாக்க ஒரு சட்டத்தை இயற்றியிருந்தேன். இப்போது, அவரது கருத்துகள் சட்டத்திற்கு எதிரானது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் அல்லது கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இதே போன்று பேசிவிட்டு அவர் திரும்பி வரமுடியுமா?.” என்று கூறினார்.

இந்த விவகாரம் மாநிலத்தில் பூதாகரமான நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சட்டப்பேரவையில் தனது நிலைப்பாட்டை கூறினார். அதில் அவர் கூறியதாவது, “மராத்தி மொழி மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். அதைக் கற்றுக்கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருக்க வேண்டும். மராத்தி மொழி மகாராஷ்டிராவில் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் அது நமது கலாச்சார பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்” என்று தெரிவித்துள்ளார்.