
மகாராஷ்டிரா மாநிலத்தில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணியில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதில், பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸுக்கு, சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கடும் மோதல் இருந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், மகாயிதி கூட்டணி கட்சித் தலைவர்களான சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த சூழ்நிலையில் சிவசேனா தலைவரும், துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் மீது அதிருப்தி இருப்பதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டதாலும், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக அவருக்கு கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஊகங்களை இடமளிக்கும் வகையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விடுத்த ஒவ்வொரு அழைப்புகளையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஏக்நாத் ஷிண்டே புறக்கணித்து வருகிறார்.
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவருக்கும் விரிசல் ஏற்பட்டு வருவதாக ஊகங்கள் இருந்து வரும் நிலையில், தன்னை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தேவேந்திர பட்னாவிஸுக்கு ஏக்நாத் ஷிண்டே சில நாள்களுக்கு முன்பு மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே நியமித்த மாநில முக்கிய அதிகாரியை தேவேந்திர பட்னாவிஸ் தற்போது நீக்கியுள்ளார். நிதி ஆயோக் திட்டத்தை மகாராஷ்டிராவின் மித்ரா (MITRA, Maharashtraa institute for transformation) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு முதல்வரான ஏக்நாத் ஷிண்டே, கட்டுமான நிறுவனரும் ஆஷார் குழமத்தின் தலைவருமான அஜய் ஆஷரை மித்ரா (MITRA) துணைத் தலைவராக நியமித்தார். தேவேந்திர பட்னாவிஸின் இந்த நடவடிக்கை, ஏக்நாத் ஷிண்டேவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தேவேந்திர பட்னாவிஸுக்கும், ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், அஜய் ஆஷரை நீக்கி இரண்டு புதிய தலைவரை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நியமித்துள்ளார். அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திலீப் வால்சே பாட்டீல் மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த ரானா ஜக்ஜித் சிங் பாட்டீல் ஆகிய இரண்டு பேரை மித்ரா துணை தலைவராக நியமித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை பிளவுப்படுத்தியும் மகா விகாஸ் கூட்டணி ஆட்சியை கலைத்தும், கடந்த 2022 ஆம் ஆண்டு 40 எம்.எல்.ஏக்களுடன் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே புதிய அரசை உருவாக்கி முதலமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.