நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள், ஊழியர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்த பின்னரே நீதிமன்றத் திறப்பு குறித்து முடுவெடுக்க முடியும் என, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளிடம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி விளக்கம் அளித்துள்ளார்.
வழக்கறிஞர்களின் தொழில் பாதிப்பு, வருமானம் இல்லாமல் தவிப்பு, காணொளி தொழில்நுட்பக் கோளாறுகள் போன்றவை உள்ளதால், உயர் நீதிமன்றத்தைத் திறக்கக்கோரி பார் கவுன்சில், வழக்கறிஞர்கள், சங்க நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி "சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் கரோனா தாக்கம் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் ஆலோசித்த பிறகே முடிவுசெய்ய முடியும். நீதிமன்றத்தின் காணொளி தொழில்நுட்பக் கோளாறுகள் விரைவில் சரிசெய்யப்படும். வீட்டிலிருந்து இணையத்தின் மூலம் வழக்கில் ஆஜராக முடியாதவர்களுக்கு, நீதிமன்றத்தில் தனி இணையத்தள அறை அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.” என்று கூறியிருக்கிறார்.